search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் வங்கி அதிகாரி"

    சென்னையில் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் வங்கி அதிகாரி, மோசடி பணத்தில் சொகுசு கார், படகு, பங்களா வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்துள்ளது. #BankOfficer #CheatingCase
    சென்னை:

    சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் கமலக்கண்ணன். முன்னாள் தனியார் வங்கி அதிகாரி. இவர் மீது நெல்லையை சேர்ந்த தொழில் அதிபர் ஜெபரத்தினம் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் மோசடி புகார் கொடுத்தார்.

    அதில், “கமலக்கண்ணன் என்னிடம் வங்கிகளில் கடன் வாங்கி தருவதாக கூறினார். இதனால் அவரை நம்பினேன். ஆனால் கமலக்கண்ணன், எனது பெயரில் பலகோடி மதிப்பில் நிலங்கள் இருப்பதாக போலி ஆவணங்கள் தயார் செய்து 3 வங்கிகளில் கொடுத்து ரூ.1.83 கோடி கடன் வாங்கி உள்ளார். அந்த வங்கியில் இருந்து எனக்கு நோட்டீசு வந்த பிறகுதான் கமலகண்ணன் மோசடி செய்தது தெரிய வந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

    இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் வங்கி அதிகாரியான கமலக்கண்ணனை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பலரிடம் தொழிலுக்காக கடன் வாங்கி தருவதாகவும், கார் கடன் வாங்கி தருவதாகவும் மோசடி செய்து வந்ததும், மோசடி பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததும் தெரியவந்தது.

    கொடைக்கானலில் ரூ.2 கோடிக்கும் மேல் உள்ள பங்களா வீடு வாங்கி உள்ளார். 2 சொகுசு கார்கள் வைத்திருக்கிறார். மேலும் உல்லாச படகு ஒன்றையும் வாங்கி அந்தமான் தீவில் நிறுத்தி வைத்திருப்பதும் தெரியவந்தது.

    தேனாம்பேட்டையில் உள்ள ஒரு வங்கியில் கமலக் கண்ணன் தனது கூட்டாளிகள் 6 பேருடன் சேர்ந்து ரூ.6.71 கோடி மோசடி செய்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இதில் அவரது கூட்டாளிகள் 6 பேரையும் சி.பி.ஐ. கைது செய்துள்ளது.

    தற்போது முக்கிய குற்றவாளியான கமலக்கண்ணன் சிக்கி உள்ளார். இதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள கமலகண்ணனை போலீஸ் காவலில் எடுக்க முடிவு செய்துள்ளது. #BankOfficer #CheatingCase
    ×